Wednesday, December 16

பாண்டிய நாட்டு ராஜகுல அகமுடையார்

பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை , மதுரை மாவட்டத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.அவர்கள்,
• கீழமண்டு அகமுடையார் 
• மேலமண்டு அகமுடையார்

மேல மண்டு 33 கிராமங்கள் அடங்கியதாகும்

1. வெயிலாம்பட்டி
2. மங்கல்ரேவ்
3. வீரப்பட்டி
4. வீராளம்பட்டி
5. சின்ன பூலாம்பட்டி
6. கோட்டைப்பட்டி
7. சேடப்பட்டி
8. சல்லுப்பபட்டி
9. தொட்டணம் பட்டி
10. அப்பக்கரை
11. தொட்டிய பட்டி
12. அலப்பலச்சேரி
13. கரிகாலம் பட்டி
14. கண்டுகுளம்
15. திருமாணிக்கம்
16. செம்பட்டி
17. பாப்பு நாயக்கன் பட்டி
18. சங்கரலிபுரம்
19. பழையூர்
20. அல்லிகுண்டம்
21. சின்ன கட்டளை
22. பூலாங்குளம்
23. பெரிய மீனாட்சி புரம்
24. துள்ளுக்குட்டி நாயக்கனூர்
25. வாக்குளம்
26. வண்ணாங்குளம்
27. வண்டாடுபட்டி
28. வண்ணம்பட்டி
29. குருவப்பன் நாயகன்பட்டி
30. நல்லமரம்
31. நாட்டணி பட்டி
32. கன்பம்
33. சாத்தங்குடி
ஆகிய 33 கிராமங்கள் மேலமண்டு அகமுடையார் கிராமங்கள் ஆகும்

கீழமண்டு  :

மதுரை-லிருந்து விருதுநகர் செல்லும் இருப்பு பாதைகளுக்கு இடையே உள்ளது திருமங்கலம் இதன் கிழக்கே உள்ள 48 கிராமங்களும் கீழமண்டு என்று அழைக்கபடுகின்றது.

1. மருதங்குடி
2. மாந்தோப்பு
3. அழகிய நல்லூர்
4. ஆவல் சூரம்பட்டி
5. அரசம்பட்டி
6. சென்னம் பட்டி
7. குராயூர்
8. கொக்குளம்
9. திருமால்
10. கூடக்கோவில்
11. கொம்பாடி
12. உப்பிலிக்குண்டு
13. உலகாணி
14. மொச்சிக்குளம்
15. மைக்குடி
16. எட்நாளி
17. விருசங்குளம்
18. ஆலங்குளம்
19. கல்லுபட்டி
20. வெப்பன்ங்குளம்
21. கல்லணை
22. பாறைக்குளம்
23. வலையங்குளம்
24. வீரப்பெருமாள் கோவில்
25. கிருஷ்ணாபுரம்
26. புதூர்
27. தும்பக்குளம்
28. கடமாங்குளம்
29. சீகனேந்தல்
30. மாங்களம்
31. மங்கை ஏந்தல்
32. பூவனேந்தல்
33. இலுப்பகுளம்
34. ஆவீயூர்
சில கிராமங்கள் விடுபட்டுள்ளது உட்பட மொத்தம் 48 கிராமங்களும் கீழமன்டாகும்.

நன்றி ஜெ.பாலசந்தர் 

Tuesday, December 15

கோவில் திருப்பணித் தென்றல் கம்பரன்பர் வே.இராஜீ சேர்வை


கம்பரன்பர்  வே.இராஜீ சேர்வை அவர்கள் தன் வாழ்நாளை இறைத் தொண்டிலேயே கழித்தவர்.இதனால் இவர் திருமங்கலத்தின் கோவில் திருப்பணித் தென்றல் என்று அழைக்கப்பட்டார்.
இன்று திருமங்கலத்தில்  வைணவத்தின் சிறப்பு மிக்க அடையாளமாக இராஜாஜி தெருவில் கம்பீரமாக அமைந்திருக்கும் பெருமாள் கோவில் இவரின் பெரு முயற்சியால் உருவானதே ஆகும். இன்று கோவில் இருக்கும் இடமும் ,கோவிலின் முன்பு(கோவிலின் எதிரே) பேருந்து நிலையம் செல்லும் பாதையில் இருக்கும் பரந்த இடமும் இவர் காலத்தில் கோவிலுக்காகப் பெறப்பட்டதே.
இதே போல் சைவ நெறி தழைக்க திருமங்கலம் அரசு மருத்துமனை எதிரில் ஈசனின் வடிவமான “மூனீஸ்வரர்” ஆலயத்தை எழுப்பினார்.இன்று சிறிய இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவில் அந்நாட்களில் விரிவான இடத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகளுடன் வெகு பிரசித்தமாக அமைந்திருந்தது.
அதுமட்டுமல்ல திருமங்கலம் புளியங்குளம் கிராமத்தில் (பி.கே.என் கல்லூரி செல்லும் பாதையில்) “செந்திலாண்டவர் ஆசிரமம்” ஒன்றை நிறுவி அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.மேலும் ஆறுபடை முருகனுக்கு தனி சன்னதி அமைக்க முயன்றார்(  இவர் இறந்ததால் கோவில் கட்டிடங்கள் பாதியில் இருப்பதும்,ஆறுபடை முருகன் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெறாது இருப்பதும் இன்றைய நிலை)
ஓவ்வொரு திருப்பணிக்குப் பின்பும் கடுமையான உழைப்பு அடங்கியிருந்தது. திருப்பணிக்காக  ஒருவரை ஒருமுறை அல்ல ,பலமுறை சந்தித்து ,இந்து தர்மங்களை எடுத்துக்கூறி  சம்மதிக்க வைத்து  பின்னர் தொடர்ந்த முயற்சியினால் இந்தக் கோவில்கள் உருப்பெற்றன.
இறைப்பணி மட்டுமின்றி,இலக்கிய பணியிலும் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.இலக்கியப் பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் இறைவணக்கத்தோடு ஆரம்பிப்பார்.இவர் இலக்கியப்பணியை பாராட்டி 1981ம் வருடம் காரைக்குடியை தலைமையிடமாகக் கொண்ட கம்பன் கழகத்தார் இவருக்கு “கம்பரன்பர்” என்ற பட்டத்தை வழங்கினர்
மேலும் பல ஆலயங்கள் திருமங்கலத்தில் பின்னாளில்  இவரைப் பின்பற்றி உருவாக எடுத்துக்காட்டாகவும், பல தர்மப் பணிகளுக்கு  ஊக்கமூட்டுபவராகவும் திகழ்ந்தார்.
இவ்வாறு இறைவனின் திருப்பணிகளில் திலைத்த இவர்  2006ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

நன்றி திருமங்கலம் இணையதளம்

Friday, December 11

மதுரை சித்திரை திருவிழாவும் அகமுடையார்கள் அறிந்து கொள்ளவேண்டிய செய்தியும்!

கங்கையிலும்  புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும்  விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது. முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சம யம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார்.
ஒரு  தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை  நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரி ஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் ஆறாம்  நாளான ஏப்ரல் 26 அன்று பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1  மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர் களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இத் தேனூர் கிராமமானது அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக ,பாரம்பரியமாக வசித்து வரும் கிராமம் ஆகும்.
திருமலை நாயக்கர் ம துரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை  மாதத்திற்கு மாற்றினார். இவ்வாறு காலம் காலமாக தேனூர் கிராமத்தில் நடந்து வந்த இந்த  வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மதுரைக்கு மாற்றிய போது,அதற்க்கு பிரதிபலனாக மதுரையில் தேனூர் மண்டபத்தை எழுப்பி,தேனூர் கிராம மக்களுக்கு மரியாதையும் செய்யும் உரிமையை செப்புப் பட்டயமாக எழுதித் தந்தார்.
மேலும் சிறப்பாக மற்ற மண்டபங்களில் அழகர் பெருமாள் எழுந்தருளும் போது,மண்டபத்தின் உரிமை உடையவர்களால் கோவிலுக்கு குறிப்பிட்ட பணம் செழுத்த வேண்டும்,ஆனால் தேனூர் மண்டபத்தில் ஸ்வாமி இறங்குவதற்க்கு இறைவனே பணத்தை தேனூர் கிராம மக்களுக்கு அளித்து வருவது நடைமுறையாகி அது இன்று வரை தொடர்கிறது.

Thenur Mandapam
Thenur Mandapam
கூடுதல் செய்தி: 
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.
முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை போன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் 
ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.




பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.
சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.




முத்து இருளப்ப பிள்ளை

இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர் காக்கும் தண்ணீராக விளங்குவது முல்லைப் பெரியார் அணையாகும்.இந்த அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் தீட்டியவர்  இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரி ,நமது அகமுடையார் இனத் தோன்றல் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்கள்.
ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தில் பிள்ளைப் பட்டம் உடையவர்.இவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
தென் தமிழகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான். ‘ஆடைக்கும் கோடைக்கும் வாடாத பனை மரங்களே’ அசந்துவிட்டன. அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் வருடத்துக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதுவும் நிலையில்லாதது. தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கைக்கும், ராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறுகள் நடந்து மக்களை மேலும் சோதித்தது.
அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.
இதை நன்கு அறிந்திருந்த முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் மேற்கே உருவாகி வீணாக கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும் அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை உதித்தது.
உடன் இந்த யோசனையை சேதுபதியிடம் தெரிவித்தார் மந்திரி முத்து இருளப்ப பிள்ளை.இதைக் கேட்டவுடன் தன் சமஸ்தானத்தின் நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கண்டுப்பிடிக்கப்பட்டதை உணர்ந்த மன்னர் தனது அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி  முழு விவரம் அறிந்துவரச் சொன்னான்.
அதுவரை மனித காலடிகளே படாத, சூரிய கதிர்களே உட்புக முடியாத, மிகப்பெரிய ராணுவம்போல அணிவகுத்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணாத் துயரத்துக்கும் விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடினார். அவற்றை தன் கற்பனை திறனுக்குள் கொண்டுவந்து  முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைகட்டிட திட்டம் வகுக்க கட்டுமானத்துக்கான சாத்தியங்களை வழிவகுத்தார்.
அந்த மகிழ்ச்சியோடு மன்னனிடம் வந்தார். அங்கேதான் விதி விளையாடியது. ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது. அவருடைய உழைப்பும் வீணானது. அதற்கடுத்த வருடங்களில் மீண்டெழுந்த தாது வருடப் பஞ்சமும் மக்களை மேலும் இம்சித்தது. இன்றைய எத்தியோப்பியாவானது அன்றைய தமிழகம்.
மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் முயற்சி செய்து 1896 ஆம் ஆண்டு கட்டி முடித்தார் என்பது வரலாறு.
இவ்வாறு முல்லைப் பெரியார் அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் வகுத்த முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தைச் சார்ந்தவர் என்பது அகமுடையார்கள் பெருமைப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.

முத்திருளப்ப பிள்ளை அவர்களின் சமாதி 

 

இவரின் சமாதி தற்போது பாராமரிப்பின்றி உள்ளதாகவும், இவரின் வாரிசுகள் இச்சமாதி ஆலயத்தை புதுப்பிக்க விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும் செய்தி!

Wednesday, December 9

வயிரவன் சேர்வைகாரர்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீர தளவா வயிரவன் சேர்வை.














முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதோபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.

பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள்.கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் “ராமலிங்க விலாசம்’ என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.

அதன்பின்னர் ஆலயத்திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .

வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.

ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம்.
ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி-தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.
பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம்.

கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

உற்சவர்களாக விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் ஆலயத்திற்குக் கொண்டு வந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.

பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல்.

நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.

நன்றி வினோத் அகமுடையார் 

வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்


தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் மங்கலங்கிழார்.


கல்வியே தெரியாத பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளித்து, அவர்களைச் சிறந்த புலவர்களாக்கிய இவர் தொண்டினை எண்ணுந்தோறும் என்னுள்ளத்தே அழுக்காறு ஏன் சுரக்காது?


யான் நூல்கள் யாத்தலிலும் மேடையில் பேசுவதிலுமே என் அறிவைச் செலவிட்டேன். ஆனால் கிழாரவர்கள் பல மணிமணியான புலவர்களைத் தயாரித்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் அவர்தம் பாரம்பரியம் நூற்றுக்கணக்கில் பல்கும் என்பதில் ஜயமில்லை. என் தொண்டினைவிடக் கிழாரின் தொண்டு சிறந்தது, என தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் "சுயசரிதை"யில் எழுதியுள்ளார்.


வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.

கல்வியைத் தொடர முடியாத நிலையை எண்ணி, பல நாள்கள் வருந்தினார் மங்கலங்கிழார். அந்நிலையில் சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார்.
"படிப்பவர் அனைவரும் வேலைக்காகப் படிக்கின்றனர்; தேர்வுக்காக வகுப்புகளில் ஒருசில தமிழ்ச் செய்யுள்களைப் படித்து அத்துடன் தமிழை மறந்து ஒதுக்கிவிடுகின்றனர்; ஏழை மக்கள் எதுவுமே படிப்பதில்லை; தாம் கற்ற கல்வி பிறர்க்கும் பயனுடையதாய் இருத்தல் வேண்டும். அதைப் பாமரர்க்கும் பரப்ப வேண்டும்," என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐயரின் கொள்கை உறுதிப்பாடு மங்கலங்கிழாருக்கும் ஒருமித்த கருத்தாக இருந்தது. இதனால் இருவரும் சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.
"இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி - அங்கம்மாள் தம்பதியரின் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார். கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.

"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.

வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.

ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941ம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.

இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு.வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.
ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.

அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.
"வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" என்று சிலம்புச் செல்வர் மா.பொ.சி. புகழ்ந்துள்ளார்.

  • தவளமலைச் சுரங்கம்
  • தமிழ்ப் பொழில் 
  • சிறுவர் சிறுகதைகள்
  • வடவெல்லை
  • தமிழ்நாடும் வடவெல்லையும்
  • சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
  • நளவெண்பா - விளக்க உரை
  • இலக்கண விளக்கம்
  • இலக்கண வினா - விடை
  • நன்னூல் உரை மற்றும் 
  • தனிக் கட்டுரைகள்

போன்றவை மங்கலங்கிழார் எழுதிய அரிய நூல்களாகும்.

சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

"தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" என்று டாக்டர் மு.வ. புகழ்ந்துள்ளார்.

1953ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் மாமனிதர் மங்கலங்கழார் இயற்கை எய்தினார். தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார் என்றுமே போற்றி நினைவு கூரத்தக்கவர்.

எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில்
  • தொடக்கப்பள்ளி
  • தெரு
  • இலக்கிய மன்றம்
  • நூல் நிலையம்
  • உருவச்சிலை
  • அறக்கட்டளை
  • நற்பணி மன்றம்
  • பூங்கா
  • மாளிகை

போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில் அவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அங்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவரது பெயரிட்டு வழங்க ஆவன செய்தால், அவருக்கும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை.



நன்றி: தமிழ்மணி (தினமணி)

அகமுடையார்களால் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட கோயில் :


பழங்கால கட்டுமானம்,கல் கருவறை, கருவறையில் மேற்கூரைக்கு மரங்கள்
கொடுத்து, வித்தியாசமான கட்டட அமைப்பு மற்றும் கருவறை வெளிபிரகாரத்தில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால்,
800 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக இருக்கலாம். பாண்டிய
மன்னர் போர் புரிந்து நாட்டை பிடித்து வந்தபோது,சேர்ந்த படையணி தலைவர், வீரர்கள் சுவாமியை வழிபட கோவில் அமைத்திருக்கலாம் என்ற
வரலாற்று செய்திகள் உள்ளன.மதுரை பகுதியில் இருந்து வந்த அகமுடையார்
சமுதாயத்தை சேர்ந்தவர்கள்,பெருமாளை வைத்து விட்டு,இங்கு ஓய்வு எடுத்ததாகவும்,மறுநாள் கிளம்ப மறுத்த சுவாமி,அங்கேயே கோவில் அமைக்க
உத்தரவிட்டதால், இக்கோவில் உருவானதாகவும், அதேபோல்,
எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தண்ணீரில் விளக்கு எரிந்தது என கோவில் அமைய பல காரணங்கள் உள்ளதால்,இது, காரணப்பெருமாள் என
அழைக்கப்படுகிறது. ஸ்ரீ காரைவன பெருமாளை குல தெய்வமாக கொண்ட அகமுடையார்கள் மதுரையை அடுத்த திருபுவனதிற்கு அருகில் உள்ள அல்லி நகரம்  கிராமத்தில் மூல ஸ்தானமும் அங்கிருந்து சிவரக்கோட்டையிலும் அங்கிருந்து பெயர்ச்சி ஆகி  இவிடத்தில் பிரதிஷ்டை செய்து தங்களது குல தெய்வத்தை பல நூற்றாண்டுகளாக வணங்கி வருகின்றனர்.  கருவறை கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.முன்மண்டபம், மகா மண்டபத்துடன்,முன்புறம், பழைய ஓடு வேயும்
முறையில் தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும்,
மதில் சுவர்கள் சிறிதாக அமைக்கப்பட்டு, தீபஸ்தம்பம் உள்ளது.
கோவிலுக்குள் செல்ல மூன்று வழிகள் உள்ளன.மூன்றிலும், ஒருவர்
மட்டுமே செல்லும் வகையில் கல் நடப்பட்டுள்ளது.பெருமாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், சங்கு சக்கரம்,முத்திரை காட்டும் விரல்,
அருளாசி கூறும் கையுடன்அருள்பாலித்து வருகிறார்.ஒரே பீடத்தில், இருபுறமும் தாயார், மலர்களுடன் நின்ற கோலத்தில் உள்ளனர். வழக்கமாக
புடைப்பு சிற்பம் அல்லது சிலைகளாக இருக்கும்.இங்கு, பெருமாள், சிலை வடிவம் மற்றும் புடைப்பு சிற்ப வடிவம் என இரண்டும் கலந்து அமைக்கப்பட்டு, பழைய சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக,வித்தியாசமான முறையில்
அமைந்துள்ளது. கோவில் முன், வலதுபுறத்தில் சக்கரம் போன்ற வட்ட
வடிவ கல்லில், சக்கரத்தாழ்வார் புடைப்பு சிற்பம் உள்ளது.இடதுபுறத்தில், ஆஞ்சநேயர் கும்பிட்ட கோலத்திலும், எதிரே கருடாழ்வாரும் உள்ளனர்.
இடதுபுறம், பிரகாரம் சுற்றி வரும்போது, புடைப்பு சிற்பமாக உள்ளதும்,
சிற்பக்கலை சிறப்பாகும். சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள்,
பெருமாள் கோவில் வைத்து வழிபட்டதும்,அவர்களே வைணவ ஜீயரிடம்
தீட்சை பெற்று, பல நூறு ஆண்டுகளாக, வைணவ முறைப்படி,
பூஜை செய்து வருவதும் வித்தியாசமானதாகும். தல விருட்சமாக பல
நூறு ஆண்டு பழமைவாய்ந்த வில்வ மரம் இருப்பதும் வித்தியாசமானதாக உள்ளது.கிருஷ்ண ஜெயந்தி,புரட்டாசி மாதத்தில், பலபகுதியில் வசிக்கும் மக்களும் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதும்,வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.இக்கோவில்,
பல்லடத்தில் இருந்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர்
ரோடு சந்திப்பு, போலீஸ் செக் போஸ்ட் அருகே,பனைபாளையத்தில்
அமைந்துள்ளது.

1891 கணக்கெடுப்பில் அகமுடையார் குல முக்கிய பிரிவுகள்:






*ஐவளிநாட்டான்

*கோட்டைப்பற்று

*மலைநாடு

*நாட்டுமங்களம்

*ராஜபோஜ

*ராஜகுலம்

*ராஜவாசல்

*கலியன்

*மறவன்

*துளுவன்

*சானி

*சேர்வைகாரன்

FROM CASTE AND TRIBES OF SOUTHERN INDIA

இலங்கையும் அகமுடையாரும் :


குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி,
அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன.
தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்
டாலும் அகம்படியர்கள்  சில இடங்களில் வாழ்கின்றனர் பெரும்பாலும் கனடா,லண்டன் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.விடுதலை புலிகளின் உளவு படையின் தலைவர் பொட்டு  அம்மான் அகமுடையார் இனத்தை சேர்ந்தவரே.வன்னியர் என்ற சாதிப் பட்டம் நெருப்பு என்று பொருள்படும் வஹ்னி என்ற வடமொழிச் சொல்லிருந்து தோன்றியிருக்கலாம். இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும்,அகம்படிய மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு.

இலங்கைத் தமிழ் கல்வெட்டுக்களில் அகமுடையார்:

வரலாற்று மூலததாரங்களில் முதன்மையானதாகக் காணப்படுகின்ற
கல்வெட்டுக்களின் அமைப்புமுறை பொதுவாக மேல்வரும் பகுதிகளைக்
கொண்டதாக அமைந்திருக்கும்.
 

1) தொடக்கச் சொல் அல்லது மங்களச் சொல்
2) கல்வெட்டின் காலக்குறிப்பு
3) நோக்கம்
4) முடிவுச் சொல் அல்லது ஓம்படைக்கிளவி


இவ்வாறான நான்கு அம்சங்களைத் தாங்கியதாக கல்வெட்டுக்கள்
காணப்பட்டாலும் ஆரம்ப காலக் கல்வெட்டுக்களில் இந்த நான்கு
அம்சங்களையும் காணமுடியாது.ஆதியான பிராமிச் சானங்களில்
பெரும்பாலானவற்றில் செய்தி மாத்திரமே காணப்படுகிறது.
எனினும் ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு பெரும்பாலான சாசனங்களில்
இந்த அம்சங்களைக் காணக்கூடியதாக உள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற மங்களச்
சொல்லை சோழர்களுடைய சாசனங்களிலே காணலாம். அதற்கு முந்தைய கால சாசனங்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ரீ என்ற சொல் மங்களச் சொல்லாக எழுதப்பட்டிருந்தது.விஜயநகர பேரரசுக் காலத்திலே சிவமஸ்து சுபமஸ்து முதலான சொற்கள் தொடக்கச் சொல்லாக வருகின்றது. இலங்கையிலே 12 ஆம் நூற்றாண்டு விஜயபாகு மன்னன் காலத்து பொலன்நறுவைக்
கல்வெட்டொன்றிலே நமே புத்தாய நம என்ற மங்களச் சொல் பௌத்த சமயத்தோடு தொடர்பு பட்டதாக வருகிறது. இவ்வாறு இலங்கையிலே
மங்களச்சொற்களை அமைக்கும் முறை சோழர்களுடைய செல்வாக்கினாலே
ஏற்பட்டுக் கொண்டது.

ஹிங்குறாங்கொடையில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குறிய வரிவடிவிலமைந்த தமிழ்ச் சாசனமென்று கிடைத்துள்ளது.இச்சாசனம் 


கஜபாகு தேவரோடு தொடர்புடைய அகம்படி என்கின்ற பிரிவினரில் ஒருவனாகிய உம்பிழ அயித்தன் என்பவன் ஜீவிதமாகிய தன் நிலத்தை விற்று புத்தஸ்தானம் ஒன்றுக்கு தானமாக வழங்கிய செய்திகளை பதிவு செய்கிறது.

 
சாசனத்தின் முடிவில் 'இதற்கு விக்நம் செய்வாருண்டாகில் புத்த ஸ்தானத்திற்கு பிளைச்சாராவார் நரகம் புகுவார்' என்று வசனம்
எழுதப்பட்டுள்ளது. இந்த தர்மத்திற்கு விரோதமிழைப்பவர்கள் பௌத்த
நிலையத்திற்கும் நெறிகளுக்கும் பிழை செய்த பாவத்தைப் பெறுவார்கள், நரகத்தையும் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.சாசனத்தில் நகர, னகர மற்றும் ளகர, ழகர வழுக்கள் இடம்பெற்றுள்ளது.சாசனங்களில் இவ்வாறான இலக்கண வழுக்கள் இடம்பெறுவது இயல்பான ஒன்றாகும்.

நன்றி


ஜெ கோபிநாத் ~ வரலாற்றுத் துறை

"கச்சத் தீவு” தமிழருக்குச் சொந்தம்!


அன்னைத் தமிழகத்தின் இராமேசுவரத்தில் இருந்து 17 கி.மீ. வடக்கில் ஆள் அரவம் இல்லாத உயரம் குறைவான குட்டித்தீவு கச்சத்தீவு.

முகம்மது அப்துல்காதர் மரைக்காயர் மற்றும் முத்து
சாமி பிள்ளை (அகமுடையார்) :

இராமநாதபுரம் ஜமீன்தாரியைச் சேர்ந்த எட்டு கிராமங்களையும், கச்சத்தீவு
உள்ளிட்ட 4 தீவுகளையும் சாயவேர் சேகரிக்க இராமநாதபுரம் கலெக்டர் எட்
வர்டு டர்னர் அவர்களிடம் இருந்து குத்தகைக்கு வாங்கினர். கீழக்கரையைச் சேர்ந்த சாயுபு மாப்பிள்ளை மரைக்காயர் மகன் முகம்மது அப் துல்காதர்
மரைக்காயரும், இராமநாதபுரம் இராமசாமிபிள்ளை மகன் முத்து சாமி பிள்ளையும் சேர்ந்து கூட்டாக வருடம் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு
குத்த கைக்கு 23.06.1880 இல் எடுத்து உள்ளனர்.கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளை
குத்தகைக்கு எடுத்த ஆவணம் இராமநாதபுரம் பதிவு அலுவலகத்தில் 02.07.1880 இல் பதிவாகியுள்ளது.

பின்னர் 1885ல் இராமநாதபுரம் சேதுபதி அரசரின் எஸ்டேட் மானேஜர் டி.ராஜாராமராயர் அவர்களிடமிருந்து இராமநாதபுரம் இராமசாமிபிள்ளை
மகன் முத்துசாமிபிள்ளை சாயவேர் சேகரிக்க கச்சத்தீவு அடங்கிய பகுதியை ஆண்டுக் குத்தகை 215 ரூபாய்க்கு பெற்றார்.

குத்தகைக்குட்பட்ட கிராமாந்தரங்களின் விபரம்:

இராமேஸ்வரம் உள்கடை உட்பட்ட கிராமம் - 1
பாம்பன் தங்கச்சி மடம் கிராமம் - 1
மண்டபம் கிராமம் - 1
மரைக்கான்பட்டினம் கிராமம் - 1
குஞ்சியா வலசை கிராமம் - 1
அருப்புக்காடு கிராமம் - 1
வேதாளை கிராமம் - 1
சாத்தன்கோன் வலசை கிராமம் - 1
ஆகக்கிராமங்கள் - 8

குத்துக்கால் தீவு - 1
முயல் தீவு - 1
மன்னாளித் தீவு - 1
கச்சத் தீவு - 1
ஆக தீவு - 4

கச்சத்தீவு தமிழர் தம் சொத்து என்பதற்கு யாரும் மறைக்க முடியாத, மறுக்க
முடியாத வரலாற்றுச் சான்றுகள் பத்திரப்பதிவுகள் தெள்ளத்தெளிவாக இராமநாதபுரம் பதிவு அலுவலகத்தில் காணக் கிடைக்கிறது.

நன்றிகள் கட்டுரையாளர் :- செ.திவான்
வெளியீடு :- சங்கொலி

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...