Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, September 4

ஏ. இலட்சுமணசுவாமி முதலியார்


மருத்துவர் ஆற்காடு இலட்சுமணசுவாமி முதலியார் B.A., M.D.,D.Sc., F.R.C.O.G., F.A.C.S. (1887  1974) சிறந்த கல்வியாளர். இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில்நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர்.

உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார்.
கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ஆம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை. 
இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

மு. வரதராசன்


மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும்,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.
தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காகதிருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.
1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

பேராசிரியராகப் பணி

1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.
மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில்அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.
சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

மாணவர்களுக்கு உதவி

மாணவர்களுக்குத் தேடிச் சென்று உதவும் குணம் கொண்டவர். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் கட்ட இயலாத மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்தவர். நோயுற்ற போதும் உதவுவார்.இவர் செய்யும் உதவிகள் இவர் தம் துணைவியாருக்குக் கூடத் தெரியாது. மேலும் உதவி பெறும் மாணவரது நண்பர்களும் அறியாவண்ணம் உதவிபெறும் மாணவருக்குத் தடைவிதித்து விடுவார்.

கல்வித்துறை ஆய்வு மாநாடுகள்

சோவியத் நாடு, பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான பல நாடுகளின் கல்வித்துறை ஆய்வு மாநாடுகளில் பங்கு பெற்றவர்.

தாக்கங்கள்

மு.வரதராசனார் காந்தியடிகள், திரு.வி.க., தாயுமானவர், இராம தீர்த்தர், இராமலிங்க சுவாமிகள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், திருநாவுக்கரசர்,மாணிக்கவாசகர், நம்மாழ்வார், கவிஞர் தாகூர், வி. ச. காண்டேகர், பெர்னாட்ஷா, சாமர்செட் மாம் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.

ஈர்க்கப்பட்டோர்

இவரால் ம. ரா. போ. குருசாமி, முனைவர் ந. சஞ்சீவி, முனைவர் சி. பாலசுப்பிரமணியம்,ஈ. ச. விசுவநாதன் முதலானோர் ஈர்க்கப்பட்டனர்.

எழுத்துப் பணி

நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...