Friday, December 11

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.
முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை போன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் 
ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.




பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.
சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.




No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...