Sunday, August 16

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அகமுடையார்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்?

அகமுடையார் இனக்குழுவினர்
அனைவரும் இந்த பதிவை கண்டிப்பாக
படித்து, மற்றவர்களுக்கும் பகிரவும்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை
அகமுடையார்கள் ஏன்
கொண்டாடுகிறார்கள்? இந்த
கேள்வியை பல இடங்களில் பலதரபட்டோர்
கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
எதற்காக இந்த கேள்வியை
கேட்கிறார்கள் என்று பார்த்தால் பல
விசயங்களின் மூலம் இந்த கேள்வி
சரியேயென படும். பொதுவாக
பசும்பொன் தேவர் தன்னை சாதிய
அடையாளத்தோடு
காட்டிக்கொள்ளவில்லை என்றாலும்
கூட, ஒரேவொரு முறை அவர் சார்ந்த
ஆப்பநாடு மறவர் சங்க மாநாட்டு
கூட்டத்தில் பங்கேற்று
பேசியிருக்கிறார். இது மட்டுமே
அவர் கலந்து கொண்ட சுயசாதி
கூட்டமாக இருக்கின்றது. மேலும் எந்த
இடத்திலும் தன்னை மறவரென
சொல்லிக்கொள்ளாமல் சாதி கடந்து
தேசிய அரசியலில் ஈடுபட்டவர்.
அப்படிப்பட்டவரையே மறவர் என்று
பெருமை பேசும் சம்பவங்களும் இங்கே
அரங்கேறி கொண்டுதான் வருகின்றன.
முக்குலத்தோர் என அடையாளப்படும்
கள்ளர் - மறவர் - அகமுடையாரில், மறவர்
உரிமை கொண்டு பசும்பொன்
தேவரை கொண்டாட பல காரணங்கள்
இருக்கின்றன. அதுபோலவே
கள்ளர்களும் பசும்பொன் தேவரை
கொண்டாட காரணம் உண்டு.
ஆங்கிலேயரின் அடக்குறையால்
தமிழகத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தை
நிறுவி திட்டமிட்டே கள்ளர் உட்பட
பலதரப்பட்ட இனக்குழுக்குளை அடக்கி
ஒடுக்கினர். அந்த கைரேகை சட்டத்தை
பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு
காலக்கட்டங்களில் எதிர்த்து
கொண்டிருந்த போது, பசும்பொன்
தேவரும் தன் பங்களிப்பை கொடுத்து
அதற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை
கொண்டு வர பாடுபட்டார்.
கடைசியாக அந்த சட்டம் கைவிட
பட்டது. ஏதோவொரு வகையில்
உதவியிருக்கிறார் என்ற
காரணத்திற்காகவே கள்ளர்களும்
பசும்பொன் தேவரை
கொண்டாடுகிறார்கள்.
இந்த இரண்டு இனக்குழுக்குளும்
பசும்பொன் தேவரை கொண்டாட
அழுத்தமான காரணங்கள் உண்டு. ஆனால்
அகமுடையார்களும் இன்று பசும்பொன்
தேவரை கொண்டாட என்ன காரணம்
இருக்க முடியுமென ஆராய்ந்தால்
நிச்சயமாக ஒன்றுமே இல்லை என்பது
தான் பதிலாக கிடைக்கிறது.
அகமுடையார்களுக்கு சேர்வை,
முதலியார், உடையார், பிள்ளை என்ற
பட்டங்கள் போலவே தேவர் என்ற பட்டமும்
பெரும்பான்மையாக வழங்கப்பட்டு
வருகிறது. அகமுடையார்களுக்கு
தஞ்சை - திருவாரூர் - நாகப்பட்டினம்
உள்ளடக்கிய டெல்டா பகுதியெங்கும்
இந்த தேவர் பட்டமே இருக்கின்றது.
இதுபோல கோவை, மதுரை,
திருச்சியென தமிழகத்தின் பிற
பகுதிகளிலும் தேவர் பட்டம்
அகமுடையாருக்கு இருக்கின்றன. இந்த
தேவர் பட்டம் இருக்கும்
அகமுடையாரில்
பெரும்பாலானோருக்கு பசும்பொன்
தேவரை மறவரென தெரியவே இல்லை,
மாறாக, பசும்பொன் தேவரை
அகமுடையார் எனவே
நம்பிக்கொண்டிருக்கும் நபர்களும்
பலருண்டு. இதை நான் என் கண்
கூடாகவே பார்த்து, கேட்டு
ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.
என் பெரிய தாத்தாவான
அ.பக்கிரிசாமித்தேவர் கூட நேதாஜி
படையில் இருந்தவர் தான். எங்கேயோ
உள்ள சுபாஷ்சந்திரபோஸுக்கும்,
திருக்குவளை அருகிலுள்ள
பக்கிரிசாமித்தேவருக்கும் என்ன
தொடர்பு?யென யோசித்தால், சட்டென
பசும்பொன் தேவரே நினைவுக்கு
வருவார். அந்த காலம் தொட்டே
பசும்பொன் தேவரை,
அகமுடையாரென நம்பியிருந்ததை
நம்மால் அறிய முடிகிறது. எந்த
வகையிலும் அகமுடையாருக்கு
ஆதரவாக இல்லாத பசும்பொன் தேவரை,
இன்றைக்கு தலையில் வைத்து
கொண்டாடி வருவதும் அதே
அகமுடையார் இனக்குழு தான்.
டெல்டா மாவட்டங்களில் நடைபெறும்
அகமுடையார் வீட்டு திருமணவிழா
பதாகைகளில் மாமன்னர்
மருதுபாண்டியர்களின் படம்
இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக
பசும்பொன் தேவர் படம் இருக்கும். அந்த
அளவுக்கு பைக், கார் என எல்லா
இடங்களிலும் அகமுடையாரோடு
பசும்பொன் தேவரும் இருக்கின்றார்
என்றால் அது அகமுடையாரின் அன்பை
தான் வெளிப்படுத்துகிறது.
அப்படிப்பட்ட அகமுடையாரை வரலாறு
எழுதுகிறேன் என்ற பெயரில்
மருதுபாண்டியரையும்,
அகமுடையாரையும் ஓரம்கட்டிவிட்டு
முக்குலத்தோர் என அறியப்படும் கள்ளர்-
மறவர்-அகமுடையாரில்
இருகுலத்தோர் மட்டும் செயல்படுவது
வேதனையான விசயமே. ஆனாலும்,
அகமுடையாரை புறக்கணித்து
விட்டு எந்த வரலாறையும் எழுதவும்
முடியாது. இனி எந்த புது
வரலாற்றையும் படைக்கவும்
முடியாது. இது தான் எதார்த்தம்.
அகமுடையாருக்கு முக்குலம்
தேவையில்லாமல் கூட
வருங்காலத்தில் போகலாம். ஆனால்
முக்குலம் என்ற குடைக்கு
அகமுடையார் கண்டிப்பாக தேவை.
ஏற்கனவே முக்குலமென்ற குடைக்குள்
பல ஓட்டைகள் விழுந்து
கொண்டிருக்கின்றன. அதை சரி செய்ய
வக்கில்லாமல், அகமுடையாரை
ஒதுக்கினால் முக்குலம் என்ற குடை
கிழிந்து தொங்குவதை யாராலும்
தடுக்க முடியாது. இன்னும் கூட
வெளிப்படையாகவே சொல்கிறேன்,
எழுத்து என்ற ஆயுதத்தை
முக்குலத்தோரில் அகமுடையார்
மட்டுமே மிக வீரியமாக பயன்படுத்த
முடியும். மற்ற இருவரை விட
வரலாற்றை எழுத அதிகம் தகுதி
படைத்தவர்கள் அகமுடையார்களே.
அதற்கு பல உதாரணங்கள் உண்டு,
இன்றைக்கு பசும்பொன் தேவரை
பற்றிய வரலாற்று நூலாக பெரிதும்
மதிக்கப்படும், "முடிசூடா மன்னர்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்"
என்ற நூலை எழுதியதே
ஏ.ஆர்.பெருமாள் என்ற அகமுடையார்
தான்!
உண்மை வரலாற்றை அகமுடையாரும்
எழுத தொடங்கினால் முக்குலம் என்ற
பலூன் உடைய தொடங்கும்.
அகமுடையாரை அனுசரித்து
போகவில்லையென்றால், இழப்பு
அனைவருக்கும் தான். ஏற்கனவே
அரசியலிலும் சரி, பதவியிலும் சரி
முக்குலத்தோர் என்ற அடிப்படையில்
அகமுடையாருக்கு இழப்பு தான்.
அதனால் இனி ஏற்படும் எந்த இழப்பும்
அகமுடையாருக்கும் பெரிய விசயமே
இல்லை என்பதையும் மற்ற
இருகுலத்தோரும் புரிந்து
கொண்டால் சரி.
- இரா.ச.இமலாதித்தன

Saturday, August 15

கணத்ததோர் அகமுடையார்


இக்கட்டுரையானது அகமுடையார்என்பதன் தோற்றுவாய் மற்றும் அகமுடையார்களுக்கு கனத்ததோர்என்ற பட்டம் கிடைத்த காரணத்தை ஆராய்கிறது.மேலும் இக்கட்டுரை பழந்தமிழ்நாட்டில் காவல் முறை தோன்றிய காரணத்தையும் கூறுகிறது. தொடக்ககாலத்திலே மனிதன் தன் உணவுத் தேவைக்காக மலைகளையும்(குறிஞ்சி) பின் காடுகளையும்(முல்லை) சார்ந்து இருந்தான்.நாளடைவில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டு,நாகரீகம் தோன்ற ஓரு சாரார் நீர்மிகுந்த இடங்களில் தங்கு பயிர் தொழில் ஈடுபட்டனர்.அவ்வாறு வேளாண்மைத் தொழிலை மேற்கொண்ட கூட்டத்தினர் அகவாழ்க்கையினர் (அகக்குடி-நாகரீகமடைந்த சமுதாயத்திற்குள் வாழ்ந்த குடியினர்) என்றும் தொடர்ந்து வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் புறவாழ்க்கையினர் (புறக்குடி ) என்று இரு பிரிவாக இருந்தனர்.நாளடைவில் புறவாழ்க்கையிலிர்ந்த வேடுவர் கூட்டத்தினருக்கு போதிய உணவுகள் கிடைக்காமல் போக அவர்கள் அகவாழ்க்கை வாழ்ந்த கூட்டத்தார் சேகரித்த வேளாண் பொருட்களை கவர்ந்து செல்ல ஆரம்பித்தனர். புறவாழ்க்கையினரின் கவர்தலில் இருந்து தாம் சேகரித்த தானியப்
பொருட்களையும் மற்றும் தம்முடன் உணவுக்காகவும்,துணைக்காகவும் வைத்திருந்த விலங்குகளை பாதுகாப்பதற்காக அகவாழ்வினர் தக்க காவல் முறையை ஏற்படுத்தினர். அந்தக் காவல் தொழிலாளர்களுக்கு அகவாழ்வினர் தமது தானியத்திலிருந்து சன்மானம் கொடுத்து வந்தனர்.நாளடைவில் வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக காவல் தொழிலாளர்கள் தமக்கு கப்பம் வசூலிக்கத் தலைப்பட்டனர், இவர்களை மேலாண்மை புரிந்தவர்களே முறையே அரசன், தளபதி ஆகினர்! இவர்களின் மேலாண்மையின் கீழே மக்கள் முதலில் பாதுகாவலை பெற்றனர்.இதுவே பிற்காலத்தில் நீதி/சட்டம் ஒழுங்கு மேலும் பல அரசின் செயல்பாடுகள் போன்றவை தோன்ற அடிப்படைஆயிற்று.இதுவே அரசியலின் ஆரம்பம் ஆகும்.அந்தக் காவல் தொழில் புரிந்து வந்த முறை கணஆட்சிமுறை என்றும் கூறப்பட்டது.கணஆட்சி ஏற்பட்ட பின் காவலர்கள் கணத்தார்கள் என்றும்,கணநாதர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

நன்றி www.agamudayarotrumai.com

Wednesday, August 12

தேவரின் திருமுகமும், கொடு முகமும்!



இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!. ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார். ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம். முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது. இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!. இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!. நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்‌ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.


 ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார். படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு. பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின. ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார். கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது. இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார். என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!...,நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.


சின்னப்ப தேவரும் வங்கி கணக்கும்

சினிமா தயாரிப்பாளர், காலம் சென்ற சாண்டோ சின்னப்ப தேவர், 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார்:

நான், சொந்தப்படம் தயாரிக்க சினிமாக் கம்பெனி துவங்கினேன். நடிகர், நடிகைகளுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க, "காசோலை' தர வேண்டும். அதுநாள் வரை, எனக்கு வங்கியில் அக்கவுன்ட் கிடையாது. அதனால், புதிதாக, என் பெயரில் ஒரு கணக்கு ஆரம்பித்து, கணிசமான ஒரு தொகையையும் போட்டு வைத்தேன். காசோலை புத்தகம் கொடுத்தனர்; வாங்கி வந்தேன்.

ஒரு வாரம் கழித்து, எனக்கு பணம் தேவைப்பட்டது. என் பெயருக்கு, காசோலையில் எழுதி கொண்டு வங்கிக்கு சென்றேன். ஆனால், என் கையெழுத்து சரியாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போய் படிக்காதவன். என் பெயரை எப்படி எழுதுவது என்று, மற்றவர்கள் சொல்லிக் கொடுத்து தான் கையெழுத்து போட்டு வந்தேன். என் கையெழுத்தையும், என் உருவத்தையும் பார்த்து சந்தேகித்த அவர்கள், என்னை ஒரு ஓரமாக உட்கார சொல்லி, போலீசுக்கு போன் செய்து விட்டனர்.

போலீஸ் வந்து என்னை விசாரித்தது...

"நான் தான் சின்னப்பா. சினிமாவில் நடித்திருக்கிறேன்...' என்று சொல்லியும், அவர்கள் நம்பாமல் மிரட்டினர். பின், எனக்கு தெரிந்தவர் களின் நம்பருக்கு போன் செய்து, அவர்கள் என்னைப் பற்றி சொன்ன பின் தான் விட்டனர். நம் பணத்தையும் போட்டு விட்டு, இந்த அவமரியாதையா... என்று, கோபம் வந்துவிட்டது. கணக்கை முடித்து, முழுப் பணத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

இதுவரை, எத்தனையோ படங்கள் தயாரித்து விட்டேன். இந்திப் படங்களும் தயாரிக் கிறேன். ஆனால், யாருக்கும், காசோலை கொடுப்பதில்லை. நேரடி சம்பளம் தான். எனக்கு, வங்கியில் அக்கவுன்ட் இன்று வரை கிடையாது... என்று, கூறியுள்ளார் சின்னப்ப தேவர்.

தினமலர்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்த போது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள்,சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய்“அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல்
மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை
உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே.இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு,மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதிஎடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து,பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட
கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டு போய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது.
இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.
வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா.
ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கிய போது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை
எடுத்துக் கொடுங்களேன் என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன்‘இதென்ன விபூதி?’என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து
விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்.
திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள்,
‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை?போனவாரம் தான் அவரை... ஐயோ’ என வாய் விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்
நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும்சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணை வைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவு செய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது
மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டுவணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன்.
அக்கவிதை இதோ!:
'பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம் கலிமொய்க்கும் இவ்வுலகைக்
காக்கவந்த கண்கண்ட தெய்வம், எம்மதத்தோரும்
சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும்
தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!'
கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக்
கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா
சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி
திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா
இது பொருந்தும்’ என்று அருளாசி கூறி,
‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின்
பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள,
அக்கணமே கண்ணதாசனின் மனதில்
'அர்த்தமுள்ள இந்துமதம்' அழகாய் அரும்பி பலநாள்
உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.

தன்னிகரற்ற தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் பற்றிய புத்தகம்


சாண்டோ சின்னப்பா தேவர்

AuthorP. தீனதயாளன்
ISBN9788184931174
Published byKizhakku
Book TitleSando Chinnappa Devar
FormatPaperback (அச்சு)
Year Published2009
 price: ₹ 110.00

தேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள். 
எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா? 

இரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது. என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது. 

முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுபடத்தையும் முடித்துவிடும் அவரது வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தன்னிகரற்ற தயாரிப்பாளரின் கதை இது.

சாண்டோ சின்னப்ப தேவர்


டிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.  

அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் -  சாண்டோ சின்னப்ப தேவர். 

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று. மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர். 

ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தினார். 

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். சின்னப்பா தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த உடற்பயிற்சிக் கூடம்தான். அங்கு ஓய்வு நேரத்தில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் தேர்ந்தவரானார்.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். 

பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.


நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு,  சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார். 

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான். 

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர். 

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்! 

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர். 

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது. 

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் ஆச்சரியமான விஷயம். 

காரணம், திரைத்துறை நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை. ஆரவாரமாக துவங்கப்படும் எந்தப் படமும் வழக்கமான பல பிரச்னைகளை தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயம். அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கு கிற விஷயம். தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.

குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார்.  மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.  படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவிக்க இதுவும் ஒரு காரணம். 

திரையுலகில் சிரமப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களிடம் அதை திரும்ப பெறமாட்டார். தன் கதையில் அவருக்கு ஒரு வேடம் அளித்து அதை சரிப்படுத்திக்கொள்வார். கடனை அடைத்தது போலவும் ஆகிவிட்டது, அவர்களுக்கு வேலை கொடுத்ததுபோலவும் ஆகிவிட்டது என திருப்தியடைவார். இப்படி ஒரு மனிதாபிமானியாகவும் விளங்கினார். 

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார். திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார். 

முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணி களுக்கு வழங்கினார். காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கி விட்டுத்தான் வேலையை துவக்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார். திறமையானவர் களை எப்படியாவது தம் படங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். 

கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக் கும். 

'ஆட்டுக்கார அலமேலு' படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு  ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் அவர்.

நாள் முழுவதும் அவர் நாவில் 'முருகா..!' என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் முறை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பணியாளர்களையும், தெரிந்தவர்களையும் 'முருகா' என்றே அழைப்பார். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா... முருகா!' என உருகிப்போகும் பக்தனான அவர், அதே முருகனை வசைபாடும்போது அந்த வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாது. 

புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.

ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே மறுநாள் 7 -9-1978 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். 

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவருக்கு மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர். 

சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது. 

விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!   

- எஸ்.கிருபாகரன்

பாண்டியர் காவியம்- இரவா

வீரத்தின் விளைநிலம் தமிழகம்! 

வைகை வர்ணனை :- 

வைகைப் பெண்ணைத் தன் சொல்லோவியம் கொண்டு அலங்கரித்து நம் உள்ளங்களைல் உலவ விட்டுள்ளார் கவிஞர்.
"
இல்லறம் நோக்கிப் பாயும்
இனியவள் வைகைப் பெண்ணாள்"
என்றும்,


"புதுமனை புகுந்த பெண்ணின்
புதுமணக் கோலம் போல,

வதுவைபோல் வந்த வைகை"
என்றும் சுவையோடும் கற்பனை நயத்தோடும் வர்ணிக்கிறார்.

"
செல்வத்தின் செல்வ மான
சிரஞ்சிவி வைகைப் பெண்ணாள்"
என்று கொஞ்சி மகிழ்கிறார்.

வைகை பற்றிக் கவிதை தீட்டும் கவிஞரின் திறன் பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' என்றதோர் சுவையமுதை நினைவூட்டவல்லது.

வீரம் :-
மருது பாண்டியரின் வீர வரலாற்றே இச்சிறு காவியத்தின் உயிர் நாடி. வீரத்தை விளைக்கும் வரிகளே முதலிலிருந்து இறுதிவரை துள்ளி வந்து இதயத்தை அள்ளி விடுகின்றன.
எடுத்துக் காட்டாய் சில வரிகள் இதோ ..... !
"
கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொ டாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
..... ..... ....
ஆண்டிகள் போல வந்த
அந்நிய வெள்ளை நீங்கள்
பாண்டியர் எம்மைப் பார்த்துப்
பரம்பரை கேட்கின் றாயா?"




"
பாளையக் காரர் தம்மைப்
பரங்கியர் கேலி செய்தால்
கூளங்கள் போலச் செய்வோம்
குருதியில் குளிக்க வைப்போம்!


கோழையின் நெஞ்சிலே வீரமெனும் குருதியோட வைக்கும் கூரிய வரிகள்!
"
உய்வதோ கொஞ்ச நாள்தான்
உரிமையும் இழந்து விட்டால்
அய்யமும் கொள்ளு வாரே
அருமையாய் நம்மைப் பெற்றோர்!"


என்று, மருது கூறும் வரிகள், மனோன்மணியத்தில் ஜீவகன் தன் படைகளுக்குக் கூறும் வீரவரிகளுக்கு இணையாக உள்ளன.


வடுகநாதரின் வீரத்தைக் குறிக்கும் வகையால் 


"நின்றவர் நின்ற வாறே
நெருப்பென வாளை வீசிக்
கண்ணிமை இமைக்கு முன்னே
களத்தினில் பலரை வீழ்த்தும்"
என்று பாராட்டி வீரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் ஆற்றல் சிறப்புக்குரியது.


"வெற்றிமகள் வருகை கண்டு
வேல்வீர மறக்குலத்து மாத ரெல்லாம்
சூலுற்ற வயிற்றையும் பெருமை யோடு
சுகமாகத் தடவிநிற்கும் தாய்மை யுண்டு"
என்று கூறும் வரிகள் அப்படியே புறநானூற்று வீரத்தாய்மார்களை நினையூட்டுகின்றன.

போர்க் களக்காட்சிகள்:

"
விருந்துக்கும் வேட்கைக்கும்
ஆசை கொண்டு
பருந்துகளோ திரண்டுவந்து
வானை மூடும்"
என்றும்,

"
முண்டங்கள் குன்று போலும்
முரிந்துவீழ் கைகால் எல்லாம்
துண்டங்கள் செய்த வாழைத்
துணுக்கெனக் கிடந்த தம்மா"

என்றும், போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் பாங்கு கலிங்கத்துப் பரணிக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன்.

உவமை:
அணிகளில் சிறந்தது உவமையணி. தமிழ் நாட்டுப் பாட்டிகள் வாயிலிருந்தும் வருவது உவமை அருவி. அத்தகு உவமையணியை ஏனோ கவிஞர் வெறுத்து விட்டார். ஓரிரு உவமை தவிர ஒளிமிகு காவியத்தில் உவமைகளைத் தேடி அலைந்தாலும் கிடைக்கவில்லை. அதனால் தானோ ஓரிடத்தில்,
"
உவமானம் எதைச் சொல்லி உரைப்பேன்?" என்று கூறுகிறார்.

தலைவனை இழந்த படையின் நிலையைக் குறிக்கும் போது,


"இதயந்தான் மடிந்தபின்னே
உடலி லுள்ள
இருகரமும் கால்களுமே
என்ன செய்யும்"


என்று கூறும் போது ஓரிரு உவமைகள் தந்தாலும் உள்ளம் சிலிர்க்கச் செய்யும் உவமைகளைக் கையாண்டுள்ளார், கவிஞர்.
 
பொம்மை ராஜாவாக உடைய தேவனுக்கு முடிசூட்டுவதைக் கவிஞர்

"அம்மிக்கு அலங்காரம் செய்வதைப் போல்" என்று கூறுவது உவமையின் உச்சிக்கே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

சமதர்ம நோக்கு:


மருது பாண்டியன் கூற்றாக,


"முறையறிந்த மன்னவராய் இருந்தால் மட்டும்
முழுநிறைவு வாராது! மக்கள் நெஞ்சால்
நிறைவுகொளச் சமதர்மம் காணும் போதே
நீதியின் மைந்தரென ஏற்றுக் கொள்வார்"


என்று முடியாட்சி மன்னனும் சமதர்ம சமுதாயம் படைக்க விழைந்து கூறுவதன் மூலம் கவிஞரின் சமதர்ம நோக்கு தெளிவாக விளங்குகிறது.

தேர் செய்த சிற்பியை மன்னனெனச் செய்யும் நிகழ்ச்சியில்,


"தொழிலொன்றே முதலாகக் கொண்டு வாழும்
தொழிலாளி தானிந்த மன்னின் மன்னன்!"


என்று கூறுவதும் பாரதிதாசன் கவிதையில் தொடங்கிவைத்த சமதர்ம சிந்தனைக்குச் சீர் கூட்டுவதாக அமைந்துள்ளது.

சூழ்ச்சி:


சூழ்ச்சி இல்லாத காவியம் சுவைபடாது. மருது பாண்டியர் காவியத்திலும் சூழ்ச்சி உண்டு. சூழ்ச்சியின் மறு உருவான தொண்டைமானை,


"சொல்லாலே அன்புதனை வாரி வீசிச்
சூழ்ச்சியை நெஞ்சிற்குள் மறைத்து வைத்தே
எல்லோரும் எம்தோழர் இனியோர் என்றே
இனிப்பொழுகப் பேசுகின்ற தொண்டை மானும்"


என்று கூறுவது,


"கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக்
கொடுங்கொடியோன் நரிக்கண்ணன் ......."


என்று பாண்டியன் பரிசில் பாரதிதாசன் கூறுவதற்கு ஒப்பாகச் சிறப்பு வாய்ந்த வரிகள்.



போரினும் அமைதியே சிறந்தது:


வீரர்க்குப் போர்க்களம் விருந்து மேடை! வெற்றியெனும் கனிதன்னை அருந்தும் மேடை! நாட்டைக் காக்கப் போரிடலாம்! ஆனால், போரே வாழ்வு என்றால் நாடு சுடுகாடாய் மாறும்! அமைதியில் பூப்பதுதான் முன்னேற்றம் என்னும் அழகுப்பூ! இத்தகு உயரிய சிந்தனை கவிஞரின் கவிதையிலே உன்னதமாய் வெளிப்படுகிறது.


"போருக்கு வாடா என்று
போர்க்களம் நோக்கி நாமும்
போருக்கே அணிவ குத்தால்
போருக்குப் பின்னே நாடு
சீரற்று, சிறப்பு மற்று
சிவகங்கைச் சீமை மக்கள்
வேருக்குள் வெந்நீர் விட்டால்
விளைவுகள் என்ன வாகும்?"


என்று கூறும் போது விடுதலைக்குப் பிறகு பல போர்களைச் சந்தித்த நம் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நடக்கத் தடுமாறும் காட்சி கண்ணில் தெரிகிறது அல்லவா?

கவித்திறன்:

மருது பாண்டியரின் வீர வரலாற்றைக் குறைவு படாமல் சுவையுடனும் தடைகாணா நடையுடனும் கூறியிருப்பது பாராட்டுக்குறியது. வேகம்! வேகம்! வேகம்! எந்த இடத்திலும் வேகத்தடையில்லை!
விருத்தங்களினால் அமைந்துள்ள இந்தக் காவியம் கற்கண்டுத் துண்டுகளாக இனிக்கின்றது.'உணர்ச்சியே கவிதையின் உயிர் நாடி' என்பதை உணர்ந்து வீரம் வரும் போது எழுந்தும், சோகம் வரும் போது விழுந்தும், இன்பம் வரும் போது மகிழ்ந்தும், துன்பம் வரும் போது துவண்டும் மாறத் தவறவில்லை கவிஞர்! கோபம் வரும் போது எல்லை மீறிச் சொற்கள் வருவதும் சுவையாகத்தான் உள்ளது. இத்தகு நாடகப் பாங்கு (dramatic style) கம்பனைப்போல் இவரிடமும் அமைந்துள்ளது பாரட்டத்தக்கது.

இந்தக் காவியம் இரவா-கபிலனின் முதல் முயற்சி! இன்னும் பல வெற்றிகளை இவர் அடைவது உறுதி!

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...