பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் மதுரை சோழவந்தான் பகுதியில் வாழ்ந்த அகமுடையார்(சேர்வை பட்டம்) வாழ்ந்த நிலக்கிழார்(விவாசாயப் பெருங்குடி) ஒருவரின் உண்மையில் வாழ்க்கையில் நடந்த நிகழ்வினைப் பின்பற்றி அதில் சில சுவாரஸ்யங்களையும் இணைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
பட்டிக்காடா பட்டணமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்ததுபி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பல முண்ணணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நகரத்து வாசனையில் இருந்து தூரத்தில் இருக்கும் கிராமத்தை( பட்டிக்காடு) எளிய விவசாயிக்கும் , சீமையில்(வெளி நாட்டில்) படித்து வரும் கதா நாயகிக்கும் நடக்கும் திருமணமும் அதனால் ஏற்படும் மனக்கசப்புகளுமே கதைக்களன் ஆகும்.
படத்தின் நாயகன் மூக்கையா சேர்வை(சிவாஜி கணேசன்) படம் முழுக்க வியாபித்து, கிராமத்து விவசாயினுடைய கதாபாத்திரத்தை அருமையாக செய்து இருப்பார்.
இந்தத் திரைப்படமானது கிராமத்து மனிதர்களின் மாண்பையும் ,எளிய வாழ்வையும்,விவசாயிகளின் கடின உழைப்யையும் தியாகத்தையும் எடுத்துக்காட்டும் படம் ஆகும்.
இத்திரைப்படத்தின் பல காட்சிகள்(வெளிப்புறக் காட்சிகள்) சோழவந்தான் ஊரிலே படப்பிடிப்பு செய்யப்பட்டது.
வேறு ஒரு விவாத்த்தில் இருக்கும் போது மதுரை ஆரப்பாளையம் முதலியார் இனத்தை சார்ந்த என் நண்பர் ஒருவர்,இந்தத் திரைப்படம் சோழவந்தானில் வாழ்ந்த அகமுடையார் ஒருவரின் உண்மை வரலாற்றை பின்பற்றி எடுக்கப்படதாக தன் தாத்தா தன்னிடம் தெரிவித்ததாக என்னிடம் கூறினார்.
மேற்க்கூறிய காரணத்தாலேயே , இத்திரைப்படத்தின் கதா நாயகன் அகமுடையார் இனத்தவராக காட்டப்படிருப்பார்.
இத்திரைப்படமானது 1973 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதையும், பிலிம் பேர் விருதையும் ஒருசேரப் பெற்றது!
எல்லா வகையிலும் மிகச்சிறந்த (பொழுது போக்கு,சமுக அக்கறை) கொண்ட இத்திரைப்படம் ஒர் வெற்றித்திரைப்படமாக அமைந்ததில் ஆச்சரியமில்லை.
நன்றி www.agamudayarotrumai.com
நான் சுவாசிக்கும் சிவாஜி - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்து, பார்ப்பார் டாக்டர் பாலி. மும்பையில் பிறந்து, வளர்ந்த அவருக்கு, தமிழ் நன்றாக புரியும். நாங்கள், ஒரு குரூப்பாக, சாந்தி தியேட்டரில், பட்டிக்காடா பட்டணமா படம் பார்க்க போயிருந்தோம். படத்தின் இரண்டாவது பாதியில், ஹிப்பி ஸ்டைலில், வருவார் சிவாஜி. 'பெண்டாட்டி இங்கே, புருஷன் லண்டனில், வயித்திலே குழந்தை, எப்படி...' என்ற வசனத்தில், 'எப்படி' என்ற வார்த்தையை, ஸ்பெஷலாக, இழுத்து பேசுவார் சிவாஜி. இக்காட்சி, டாக்டர் பாலிக்கு, ரொம்ப பிடிக்கும்.பி.மாதவன் இயக்கத்தில், சிவாஜி, ஜெயலலிதா நடித்து, சூப்பர் ஹிட்டான படம், பட்டிக்காடா பட்டணமா. கருப்பு வெள்ளைபடங்களிலேயே, மிக அதிக வசூலை குவித்த படம். சிவாஜி நடிப்பில், ராமன் எத்தனை ராமனடி, பாட்டும் பரதமும் எங்க ஊரு ராஜா, தங்கப் பதக்கம், ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, வியட்நாம் வீடு போன்ற, பல வெற்றிப்படங்களை, பி.மாதவன் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில், 'கேட்டுக்கோடி உருமி மேளம், போட்டுக் கோடி கோ கோ தாளம்...' பாடல் காட்சியில், கிதார், டிரம்ஸ் என்று, பல மேற்கத்திய இசை கருவிகளை, உபயோகப்படுத்தியிருப்பார். வேஷ்டி, ஜிப்பா, குடுமியோடு கிராமத்தான் கெட்டப்பில், சிவாஜி பாடும் போது, மேற்கத்திய இசைக்கருவிகள் ஒலிக்கும். மாடர்ன் உடையில் இருக்கும் ஜெயலலிதா பாடும்போது, கிராமத்து இசைக்கருவிகளான உருமிமேளம், தாரை, தப்பட்டை போன்றவை ஒலிக்கும்.சிவாஜியை பொறுத்தவரை, இந்தப் படம் அவருக்கு, ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படத்தால், அவருக்கு ரசிகர் பட்டாளம் பல மடங்கு அதிகரித்தது. பட்டிக்காடா பட்டணமா படத்தை, ஜெயலலிதாவிற்காக பிரத்யேக காட்சி, ஏவி.எம்., தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் யு.ஏ.ஏ., நாடகக்குழுவில் உள்ளவர் களையும், அந்த காட்சிக்கு அழைத்திருந்தார் ஜெயலலிதா. படம் பார்த்து முடிந்த பின், எங்களிடம், 'படம் எப்படி இருக்கு...' என்று, கேட்டார் ஜெயலலிதா. சற்று தயக்கத்துடன், 'பரவாயில்லை, சுமார்' என்று சொன்னோம். காரிலே ஏறியபடி, 'இந்தப் படம் உங்களை மாதிரி ஆட்களுக்காக எடுக்கப்படவில்லை. பாமர மக்களுக்காக, அவர்கள் மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம். படத்தின், ௨௫வது வார வெள்ளி விழாவில், உங்களை சந்திப்பேன்...' என்று தன்னம்பிக்கையோடு, சொல்லி சென்றார். படமும் மாபெரும் வெற்றி அடைந்து, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.பழம்பெரும் நடிகர், பாடகர் டி.ஆர்.மகாலிங்கத்தின், கணீர் குரலுக்கு, சிவாஜி மிகப்பெரிய விசிறி.பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு, மதுரை அருகே உள்ள சோழவந்தானில், பதினைந்து நாட்கள் நடைபெற்றது. மற்ற நடிக, நடிகையர், இயக்குனர் மாதவன், டெக்னீஷியன்கள் எல்லாரும், மதுரையில் தங்கி, அங்கிருந்து படப்பிடிப்பிற்கு தினமும் வருவர். ஆனால், சிவாஜி மட்டும், சோழவந்தானில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின், பண்ணை வீட்டில் தங்கி, அவருடனே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டி.ஆர்.மகாலிங்கத்துடன் பதினைந்து நாட்கள் தங்கியது தனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாக கூறுவார் சிவாஜி.இந்த படத்தில் வரும், 'என்னடி ராக்கம்மா...' பாடல், 42 ஆண்டுகள் ஆகியும், இன்னும் சிரஞ்சீவியாக, ரசிகர்கள் மனதில் பசுமையாக இருக்கிறது. இன்றும் லைட் மியூசிக் குழுக்கள், எப்.எம்.,ரேடியோ, 'டிவி' சேனல்களில் தவறாமல் ஒலிபரப்பப்படுகிறது. சந்திரமுகி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த், இந்த பாட்டை உபயோகப்படுத்திக் கொண்டார்.
- எஸ். ரஜத்
நன்றி தினமலர்