திவான் பகதூர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் (1887 – 1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமசாமி முதலியார் 1887இல் தென்னாற்காட்டில் ஒரு வசதி படைத்த
அகமுடையார் குடும்பத்தில் பிறந்தார்.
இவரும் ஆற்காடு லட்சுமணசாமி
முதலியாரும் இரட்டையர்கள் ஆவர் . இவர் கர்னூலிலுள்ள முனிசிப்பல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில்சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1920 - 1926; 1931-1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ். சத்தியமூர்த்தியிடம் தோற்றுப் போனார்.
நீதிக்கட்சி
இராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.சூலை 1918இல் இராமசாமி முதலியார், மருத்துவர் டி. எம். நாயர்,கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது. இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார் இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர்அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன.
நவம்பர் 8, 1926இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி 98இற்கு 21 இடங்களை மட்டுமே பிடித்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. தோல்வியடைந்தவர்களில் முதலியாரும் ஒருவர். தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பி. என். ராமன் பிள்ளைக்குப் பதில் நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ்செய்தித் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார்.இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித் தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர் ஏ. டி. பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935இல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.இவர் பிரித்தானியஅரசின் இந்தியத்துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பெப்ரவரி 25, 1937இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.
அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் இயக்கம்
இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜுடனும் மகாராட்டிரப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.திசம்பர் 18,1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பிராமணரல்லாதோர் மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.திசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பெப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு பிராமணரல்லாதவர்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
1925இல் சர் பி. டி. தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும்நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. திசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாடு நடத்த பனகல் அரசருக்குத் துணை புரிந்தார். திசம்பர் 26, 1925இல் இரண்டாவதாக மறுபடியும் ஒரு மாநாட்டை அமராவதியில் நடத்தினார். அது இரு தொடர்களாக நடந்தது. முதல் கூட்டத்தொடருக்குக் கோலாப்பூர் மகாராசாவும் இரண்டாவது தொடருக்குப் பனகல் அரசரும் தலைமை தாங்கினர்.
இரண்டாவது தொடரில் முதலியார் பேசியது:-
“ | பிராமணரல்லாதோர் இயக்கத்தினைப் பற்றி நான் விளக்க வேண்டிய கட்டத்தை அது தாண்டிவிட்டது. அதன் செயல்பாடுகள்பம்பாயிலிருந்து சென்னை வரையும் விந்திய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையும் பரவியுள்ளன. நாடு முழுவதும் அதன் கொள்கைகள் பரவிய மின்னல் வேகமும் வீச்சுமே இயக்கத்தின் நிலையை விளக்கிவிடும். | ” |
முதலியாரின் பேச்சைத் தி இந்து நாளிதழ், பிற மாகாணத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் இந்த அளவுக்கு அவரது கற்பனையைத் தூண்டியிருக்கிறது என விமர்சனம் செய்தது.
போர்க்கால அமைச்சரவையில்
1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், வைசிராயின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜூன் 1942ல் அவருக்கு கே. சி. எசு. ஐ (KCSI) பட்டம் வழங்கப்பட்டது. சூலை 1942இல் பிரித்தானியப் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர். பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட மற்றப் பகுதிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருந்த்து.
ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றத் (ECOSOC) தலைவராக
1945இல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக முதலியார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த செயற்குழுக் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார். சனவரி 23,1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முதலியாரின் தலைமையில் பெப்ரவரி 1946இல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டுச் சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூன் 19, 1946இல் பன்னாட்டுச் சுகாதார மாநாடு நடந்தது. அதனை முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டிற்றான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.பொருளாதார, சமூக மன்றத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்து பின் பணிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார். மைசூர் மகாராஜா ஜயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டாமென ஆலோசனை கூறினார்.