Friday, February 2

மதுரை சிதம்பர பாரதி சேர்வை


1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...