Monday, July 18

மருது பாண்டியர் கட்டிய காளையார் கோயில் மற்றும் மருது பாண்டியர் கோயில்



“மருது பாண்டியர்கள் சரணடையவில்லை என்றால் காளையர் கோவிலை இடித்து விடுவோம்” என்று வெள்ளைக்காரன் எச்சரிக்க, எம்முயிரை விடக் கோவில்களே முக்கியமென்று கருதி சரணடைந்து தூக்கு மேடை ஏறிய தெய்வங்களே மருது சகோதரர்கள்.

காளையார் கோயில்



பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால்  தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும்.

பழைய புகைப்படம் காளையார் கோயில் 

 


நாட்டுப் பாடல் ஒன்று,

"கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி"
என்று அவர்களின் பெருமை சொல்லும்.

மருது கட்டிய ராஜ கோபுரம்




கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.



இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு.காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும் அடுத்த பதிவில் பார்ப்போம்.1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.

காளையார் கோயிலில் உள்ள மருதரசர்கள் சிலை 


மருது திருக்கோயில்:

 

குரு பூஜையின் போது

கோயிலின் எதிரே மருது பாண்டியர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள மருது சிலை


வேற்று நாட்டவனும் அதிர்ந்து போன மருது பாண்டியர்களின் வீரம் தெறித்த இம்மண்ணில், கோயில் அறம் காக்க தன் இன்னுயிர் நீக்கினாரே! செத்தும் வாழும் வீரர்கள் துயில் பயிலும் ஜீவ சமாதி! கோயிலை நோக்கி தத்தமது சிரசுகள் இருக்கும்படிக்கு புதைக்குமாறு ஆங்கிலேயரிடம் சொன்னபடியாள்  புதைக்கப்பட்டது இவ்விடத்திலே! தரிசனம் செய்ய மறவாதீர்! நமது தூய்மையான அஞ்சலியும், சில துளி கண்ணீரும் இவ்வீரத் தமிழருக்கு, காளையார் கோயில் கட்டிய காளையருக்கு நாம் செலுத்தும் கடனாம்! நமது தேசத்தைக் காக்க இங்கே நமது வேண்டுதலை வைப்போம்! 

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...