Tuesday, September 29

க. இராசாராம்

க. இராசாராம் (K. Rajaram, 26.08.1926 - 8.2.2008), தமிழகத்தின் முன்னாள் அமைச்சராவார்.இவர் சேலம் மாவட்டத்தின் ஆத்தூரில் பிறந்தவர். இவரது தந்தை பெ. கஸ்தூரி வருவாய்த்துறை அலுவலரும்,நீதிக்கட்சி அனுதாபியுமாவார்.இராசாராம் தருமபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அரசியலில்

கல்லூரிக் கல்விக்கு பின், திராவிடர் கழகத்தில் இணைந்து ஈ. வெ. இராமசாமியின் செயலராகப் பணியாற்றினார்.
அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கருணாநிதி, எம். ஜி. ஆர் , ஜெயலலிதா அமைத்த அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.
1977 இல் இராசாராம், இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோர் சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினர். மக்கள் திமுகவின் தலைவராக நெடுஞ்செழியனும், பொதுச் செயலாளராக இராசாராமும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாள்களில் மக்கள் தி.மு.கவை அ.தி.மு.கவுடன் இணைத்தனர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்றபோது வி. என். ஜானகி அணியில் 1989 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபின் 1991 தேர்தலில் சேலம் பனைமரத்துப் பட்டித் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சரானார். சிலகாலத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

மறைவு

2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரகக் கோளாற்றால் சென்னையில் காலமானார்.

சுயசரிதை

இவர் "ஒரு சாமானியனின் நினைவுகள்" என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

வகித்த பதவிகள்

  • 1962இல் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1967இல் சேல நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1971இல் திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சர்.
  • 1980இல் தமிழகச் சட்ட மன்றப் பேரவைத் தலைவர்.
  • 1984இல் அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்.
  • 1996இல் அதிமுக அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சர்

Tuesday, September 22

டி.ராமசாமி

டி.ராமசாமி


டி.ராமசாமி முன்னாள் அமைச்சரும் 1977,1980,1984 என மூன்று முறை தொடர்ச்சியாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.ராமநாதபுரம் அரசரை வென்ற டி.தங்கப்பன் இவருடைய அண்ணன் ஆவார்.


ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள ராமசாமி அவர்களின் பதாகை

பி.வி.தேவர்


பி.வி.தேவர் 1967 நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில்  காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.இவருடைய மகன் பி.வி.ராஜேந்திரன் ஆவார் இவரும் பிரபல அரசியல்வாதி ஆவார்.

சிவகங்கை சீமை


சிவகங்கை சீமை, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணதாசன்திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

பாடல்கள்

  • வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது - டி.எம்.எஸ்
  • முத்துப் புகழ் படைத்து மூன்று நெறி வளர்த்து - எஸ். வரலட்சுமி, ராதா ஜெயலட்சுமி
  • கொட்டு மேளம் கொட்டும்க்கடி- ஜிக்கி குழுவினர்
  • மருவிருக்கும் கூந்தல் - வி.என்.சுந்தரம்
  • ஆலிக்கும் கைகள் அருள்கின்ற பார்வை - வி.என்.சுந்தரம்
  • கன்னங்கருத்த கிளி கட்டழகன் தொட்ட கிளி - பி. லீலா குழுவினர்
  • கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் - டி.எம்.எஸ், டி. எஸ். பகவதி
  • தனிமை நேர்ந்ததோ - எஸ்.வரலட்சுமி
  • தென்றல் வந்து வீசாதோ தென்னாங்கு பாடாதோ - எஸ்.வரலட்சுமி, ராதா ஜெயலட்சுமி
  • மேகம் கவிந்ததம்மா மின்னல் வரப்போகுதம்மா - பி. சுசீலா
  • சிவகங்கை சீமை, எங்கள் சிவகங்கை சீமை - டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி.கோமளா - குழுவினர்.
  • விடியும் விடியும் என்றிருந்தோம் - டி. எஸ். பகவதி
  • கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் - டி. எஸ். பகவதி
  • சாந்து பொட்டு தளதளக்க - பி. லீலா, ஜமுனா ராணி

பட்டிக்காடா பட்டணமா

பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் மதுரை சோழவந்தான் பகுதியில் வாழ்ந்த அகமுடையார்(சேர்வை பட்டம்) வாழ்ந்த நிலக்கிழார்(விவாசாயப் பெருங்குடி) ஒருவரின் உண்மையில் வாழ்க்கையில்  நடந்த நிகழ்வினைப் பின்பற்றி அதில் சில சுவாரஸ்யங்களையும் இணைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். 
பட்டிக்காடா பட்டணமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்ததுபி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம்  சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பல முண்ணணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நகரத்து வாசனையில் இருந்து தூரத்தில் இருக்கும் கிராமத்தை( பட்டிக்காடு) எளிய விவசாயிக்கும் , சீமையில்(வெளி நாட்டில்)  படித்து வரும்  கதா நாயகிக்கும் நடக்கும் திருமணமும் அதனால் ஏற்படும் மனக்கசப்புகளுமே கதைக்களன் ஆகும்.

Pattikada Pattanama Agamudayar Movie Poster

படத்தின் நாயகன் மூக்கையா சேர்வை(சிவாஜி கணேசன்) படம் முழுக்க வியாபித்து, கிராமத்து விவசாயினுடைய கதாபாத்திரத்தை அருமையாக செய்து இருப்பார்.
இந்தத் திரைப்படமானது கிராமத்து மனிதர்களின் மாண்பையும் ,எளிய வாழ்வையும்,விவசாயிகளின் கடின உழைப்யையும் தியாகத்தையும் எடுத்துக்காட்டும் படம் ஆகும்.
இத்திரைப்படத்தின் பல காட்சிகள்(வெளிப்புறக் காட்சிகள்) சோழவந்தான் ஊரிலே படப்பிடிப்பு செய்யப்பட்டது.
வேறு ஒரு விவாத்த்தில் இருக்கும் போது மதுரை ஆரப்பாளையம் முதலியார் இனத்தை சார்ந்த என் நண்பர் ஒருவர்,இந்தத் திரைப்படம் சோழவந்தானில் வாழ்ந்த அகமுடையார் ஒருவரின் உண்மை வரலாற்றை பின்பற்றி எடுக்கப்படதாக தன் தாத்தா தன்னிடம் தெரிவித்ததாக என்னிடம் கூறினார்.
மேற்க்கூறிய காரணத்தாலேயே , இத்திரைப்படத்தின் கதா நாயகன் அகமுடையார் இனத்தவராக காட்டப்படிருப்பார்.
இத்திரைப்படமானது 1973 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதையும், பிலிம் பேர் விருதையும் ஒருசேரப் பெற்றது!
எல்லா வகையிலும் மிகச்சிறந்த (பொழுது போக்கு,சமுக அக்கறை) கொண்ட இத்திரைப்படம் ஒர் வெற்றித்திரைப்படமாக அமைந்ததில் ஆச்சரியமில்லை.
நன்றி www.agamudayarotrumai.com

நான் சுவாசிக்கும் சிவாஜி  - ஒய்.ஜி. மகேந்திரன்



சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்து, பார்ப்பார் டாக்டர் பாலி. மும்பையில் பிறந்து, வளர்ந்த அவருக்கு, தமிழ் நன்றாக புரியும். நாங்கள், ஒரு குரூப்பாக, சாந்தி தியேட்டரில், பட்டிக்காடா பட்டணமா படம் பார்க்க போயிருந்தோம். படத்தின் இரண்டாவது பாதியில், ஹிப்பி ஸ்டைலில், வருவார் சிவாஜி. 'பெண்டாட்டி இங்கே, புருஷன் லண்டனில், வயித்திலே குழந்தை, எப்படி...' என்ற வசனத்தில், 'எப்படி' என்ற வார்த்தையை, ஸ்பெஷலாக, இழுத்து பேசுவார் சிவாஜி. இக்காட்சி, டாக்டர் பாலிக்கு, ரொம்ப பிடிக்கும்.
பி.மாதவன் இயக்கத்தில், சிவாஜி, ஜெயலலிதா நடித்து, சூப்பர் ஹிட்டான படம், பட்டிக்காடா பட்டணமா. கருப்பு வெள்ளைபடங்களிலேயே, மிக அதிக வசூலை குவித்த படம். சிவாஜி நடிப்பில், ராமன் எத்தனை ராமனடி, பாட்டும் பரதமும் எங்க ஊரு ராஜா, தங்கப் பதக்கம், ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, வியட்நாம் வீடு போன்ற, பல வெற்றிப்படங்களை, பி.மாதவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், 'கேட்டுக்கோடி உருமி மேளம், போட்டுக் கோடி கோ கோ தாளம்...' பாடல் காட்சியில், கிதார், டிரம்ஸ் என்று, பல மேற்கத்திய இசை கருவிகளை, உபயோகப்படுத்தியிருப்பார். வேஷ்டி, ஜிப்பா, குடுமியோடு கிராமத்தான் கெட்டப்பில், சிவாஜி பாடும் போது, மேற்கத்திய இசைக்கருவிகள் ஒலிக்கும். மாடர்ன் உடையில் இருக்கும் ஜெயலலிதா பாடும்போது, கிராமத்து இசைக்கருவிகளான உருமிமேளம், தாரை, தப்பட்டை போன்றவை ஒலிக்கும்.
சிவாஜியை பொறுத்தவரை, இந்தப் படம் அவருக்கு, ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படத்தால், அவருக்கு ரசிகர் பட்டாளம் பல மடங்கு அதிகரித்தது. 
பட்டிக்காடா பட்டணமா படத்தை, ஜெயலலிதாவிற்காக பிரத்யேக காட்சி, ஏவி.எம்., தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் யு.ஏ.ஏ., நாடகக்குழுவில் உள்ளவர் களையும், அந்த காட்சிக்கு அழைத்திருந்தார் ஜெயலலிதா. படம் பார்த்து முடிந்த பின், எங்களிடம், 'படம் எப்படி இருக்கு...' என்று, கேட்டார் ஜெயலலிதா. சற்று தயக்கத்துடன், 'பரவாயில்லை, சுமார்' என்று சொன்னோம். காரிலே ஏறியபடி, 'இந்தப் படம் உங்களை மாதிரி ஆட்களுக்காக எடுக்கப்படவில்லை. பாமர மக்களுக்காக, அவர்கள் மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம். படத்தின், ௨௫வது வார வெள்ளி விழாவில், உங்களை சந்திப்பேன்...' என்று தன்னம்பிக்கையோடு, சொல்லி சென்றார். படமும் மாபெரும் வெற்றி அடைந்து, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
பழம்பெரும் நடிகர், பாடகர் டி.ஆர்.மகாலிங்கத்தின், கணீர் குரலுக்கு, சிவாஜி மிகப்பெரிய விசிறி.
பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு, மதுரை அருகே உள்ள சோழவந்தானில், பதினைந்து நாட்கள் நடைபெற்றது. மற்ற நடிக, நடிகையர், இயக்குனர் மாதவன், டெக்னீஷியன்கள் எல்லாரும், மதுரையில் தங்கி, அங்கிருந்து படப்பிடிப்பிற்கு தினமும் வருவர். ஆனால், சிவாஜி மட்டும், சோழவந்தானில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின், பண்ணை வீட்டில் தங்கி, அவருடனே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டி.ஆர்.மகாலிங்கத்துடன் பதினைந்து நாட்கள் தங்கியது தனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாக 
கூறுவார் சிவாஜி.
இந்த படத்தில் வரும், 'என்னடி ராக்கம்மா...' பாடல், 42 ஆண்டுகள் ஆகியும், இன்னும் சிரஞ்சீவியாக, ரசிகர்கள் மனதில் பசுமையாக இருக்கிறது. இன்றும் லைட் மியூசிக் குழுக்கள், எப்.எம்.,ரேடியோ, 'டிவி' சேனல்களில் தவறாமல் ஒலிபரப்பப்படுகிறது. சந்திரமுகி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த், இந்த பாட்டை உபயோகப்படுத்திக் கொண்டார்.
 - எஸ். ரஜத்

நன்றி தினமலர்

மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதி பற்றிய வரலாற்று தகவல் !!!

சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர்வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர்.அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை.

கடைசியாக சின்ன மருதுவின் இளையமகன் துரைச்சாமி. பதினைந்து வயது பாலகன். வயதைக் காரணம் காட்டி அவனைத் தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியைக் காணவைத்தது கொடுமை. 

அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இரும்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.



இந்த மாவீரனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராகவளர்த்து உருவாக்கி விடுவான் என்ற பயம் பறங்கியருக்கு.. அந்த மாவீரனையும் சேர்த்து 72 பேரை சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டுமே காலில் இரும்பு குண்டு களைப் பிணைத்திருந்தார்கள்.

அந்த மாவீரன் தான் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்.

நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி சேக் உசேன் விளங்கினார் என வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு - 1971) கூறுகிறது. 

மாவீரன் சேக் உசேனின் வீரம் :

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுக்கல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார். ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.
அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர். இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.
இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை, தெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்..



நானே அதற்கு தலைமை ஏற்பேன்என்று திண்டுக்கல் புரட்சிப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன்தான். 


வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.

அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகம், நாட்டுப்பற்று, நிர்வாகத்திறன் என்று சகல விஷயங்களிலும் திறமை வேண்டும். அந்தச் செயலை செய்து தன்னை சிறந்த தமிழ்ப் போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.

சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர்மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையார்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்குச் சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.

இரும்பு குண்டுகள் பிணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்குத் தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டார். கடலிலேயே நாட்கள் பல கடந்தன.

சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்தத் தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுவார்கள் என்றே தெரியாது.

கிளிங்கர்கள் : 

மாவீரன் சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேர்களின் உடல் முழுதும் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும்போது கிளிங்! கிளிங்!என்ற சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்என்ற சத்தம் வந்ததால் இவர்களை கிளிங்கர்கள்என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் கிளிங்கர்கள்என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்ததால், அவரால் சிறிதுதூரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்குமேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.

எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவுகூட தராமல் காலம் தள்ளியது கொடுமை.

ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க, இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.

உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்கச் சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

நீண்ட மௌனத்திற்குப்பிறகு சேக் உசேன், ‘‘என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர, அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்’’ என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.

ஆனால் துரைச்சாமி, ‘‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை என் தாய் நாட்டிற்குத் தெரியப் படுத்துங்கள்’’ என்று ஒரு மனு கொடுத்தார் அது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.

இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, ‘‘எனது இராணுவ நினைவுகள்’’ என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும்.


மருது குடும்பத்து நகைகள் வழக்கு


மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள் 24, அக்டோபர் 1801இல் ஆங்கிலேயரால் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவரின் மனைவி வீராயி, மருதுபாண்டியரின் மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்பாள் இவர்களது 6600 நட்சத்திர பகோடாப் பெறுமானமுள்ள நகைகள் சிவகங்கை ஜமீந்தாரால் பறித்துக்கொள்ளப்பட்டன.
அவ்விரு பெண்களும் 1803ல் நகைகளைக்கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். நகைகளை அவர்களிடம் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. கீழ்க் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஜமீந்தார் திருச்சியிலுள்ள சதர்ன் பிரொவின்சியல் கோர்ட் ஆஃப் அப்பீல் (Southern Provincial Court of Appeal) இல் மேல் முறையீடு செய்தார். 3 மார்ச், 1806இல் அப்பீல் கோர்ட் ஸ்மிருதி சந்திரிகா எனும் இந்து நூலை ஆதாரமாகக் கொண்டு, மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமைக்கு அடிமைகள் ஆகவே அவர்களின் மனைவியரும் அடிமைகள். அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது. எனவே ஜமீந்தார் கைப்பற்றிய நகைகளைக் கோரிட உரிமை கிடையாது என ஜமீந்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு உரைத்தது.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...